மதுரை: நகராட்சியாக இருந்த மதுரை 1971ஆம் ஆண்டு மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றது. அதன் முதல் மேயராக முத்து என்பவர் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 1978ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநகராட்சி தேர்தலில் மேயராக முத்து தேர்வு பெற்றார். மதுரை மாநகராட்சியில் இதுவரை மேயராகப் பொறுப்பில் இருந்தவர்கள் விவரம் பின்வருமாறு,
எஸ். முத்து (1971–1980)
எஸ். கே. பாலகிருஷ்ணன் (1980–1982)
எஸ். பட்டுராஜன் (1982–1984)
பி. குழந்தைவேலு (1996–2001)
சி. ராமச்சந்திரன் (2001–2006)
ஜி. தேன்மொழி கோபிநாதன் (2006–2011)
வி. வி. ராஜன் செல்லப்பா (2011–2016)
இந்நிலையில், மதுரையின் எட்டாவது மேயராகவும் இரண்டாவது பெண் மேயராகவும் திமுகவின் மாமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திராணி இன்று (மார்ச் 4) பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கம் பெற்ற வார்டுகளில் தற்போது நிலவும் குடிநீர் சிக்கல், முழுமையடையாத பாதாள சாக்கடைத் திட்டங்கள், மத்திய அரசின் நிதி உதவியோடு நடைபெறும் சீர்மிகு நகரம் திட்டங்கள் எனப் பல்வேறு சவால்கள் உள்ள நிலையில், இந்திராணி மேயராக பொறுப்புக்கு வந்துள்ளார்.
பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’மதுரையின் வளர்ச்சிக்காக என்னுடைய நிர்வாகம் மிக நேர்மையாக நடைபெறும்’ என இந்திராணி குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகராட்சியின் 8ஆவது மேயராக பொறுப்பேற்ற இந்திராணியின் பதவி ஏற்பு விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் உள்ள பெரியார் கூட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு ஆணையர் மரு.கார்த்திகேயன் தலைமை வகித்தார். பகல் 12 மணியளவில் இந்திராணி உறுதிமொழியேற்றார். பின்னர், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து, மேயருக்கான வெள்ளிச் செங்கோலை ஆணையர் வழங்கினார்.
முன்னதாக, மேயர் அணியும் தங்க கழுத்து அங்கியும், கறுப்பு மேலங்கியும் அணிந்து வருகை தந்த இந்திராணிக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் மேயரான ஆட்டோ ஓட்டுநர்!