வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில்,
'மதுரையில் கரோனா புயல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலுக்கான காரணத்தைத் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். உயர் அலுவலர்களை மாற்றியதால் கரோனா பணிகளில் தொய்வு ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மதுரைக்கு அதிக நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆம்புலன்ஸ் இல்லாமல் கரோனா நோயாளியை சரக்கு வாகனத்தில் ஏற்றி வரும் அவலநிலை உள்ளது. தமிழ்நாடு அரசு மத்திய அரசோடு முரண்படாமல் இணக்கமாகச் சென்று கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். படுக்கை வசதிகளுக்கு ஏற்ற மருத்துவர், செவிலியர் இல்லை. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படவில்லை. 6ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த திமுக புதிய அரசு என சொல்ல முடியாது" எனக் கூறினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்:-
'மதுரையில் கரோனா பரவல் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது, 7ஆம் தேதிக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்' என்றார்.
மேலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா கட்டுக்குள் இருந்தது, முதல் அலையின் போது உணவுகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டது" எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:அரசின் செயல்பாடுகளை விமர்சித்த மருத்துவருக்கு தடை: மருத்துவ கவுன்சில் பதிவாளர் பதிலளிக்க உத்தரவு!