அன்றைய ஆங்கிலேய அரசு சென்னை மாகாணத்திற்கு 999 ஆண்டுகள் குத்தகைக்கு என கடந்த 1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள், முல்லை பெரியாறு அணை கட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இன்றுடன் 135 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அடிக்கடி பஞ்சம், பசி, பட்டினி, கடும் வறட்சியில் சிக்கும் தென் மாவட்ட மக்களின் இன்னலைப் போக்குவதற்காக அன்றைய சேதுபதி சமஸ்தானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதிலொன்றுதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆற்று நீரை அன்றைய மதுரை, சேதுபதிச் சீமைக்கு கொண்டு வருவது. இதற்காக சேதுபதி மன்னர் தன்னுடைய அமைச்சர் முத்திருளப்ப பிள்ளையை ஆய்வுக்கு அனுப்பினார்.
பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர், இத்திட்டத்திற்கான வரைவறிக்கையை முத்திருளப்ப பிள்ளை வழங்கினாலும், நிறைவேற்ற போதிய நிதியின்மை காரணமாகக் கைவிடப்பட்டது.
பின்னர் ஆங்கிலேயர்கள் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தினர். பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கர்னல் பென்னிக்குயிக், ஆங்கிலேய அரசாங்கத்தின் உதவியோடு இடையறாமல் முயற்சி மேற்கொண்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்றினார்.
பொறியியல் அதிசயம்
மேற்கே அரபிக்கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை, கிழக்கே திருப்பும் ஒரு பொறியியல் அதிசயம்தான் முல்லைப் பெரியாறு அணை. முல்லையாறும் பேரியாறும் (பேரியாறு என்பதுதான் மிகச் சரி) சந்திக்கும் இடத்தில் இரண்டு மலைகளையே அரணாகக் கொண்டு அமைக்கப்பட்ட அணை. நதிகள் இணைப்புக் குறித்து இன்று பேசுகின்றோமே அதற்கு விதை விதைத்தவர்கள் சேதுபதி அமைச்சர் முத்திருளப்பிள்ளை என்றால், அதை நிறைவேற்றியவர் பென்னிக்குயிக்.
1887ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்ட தொடங்கி 1895ஆம் ஆண்டு வரை பெருமழை, வெள்ளம், காலரா, வனவிலங்குகள் என பல்வேறு இடையூறுகளைத் தாண்டி இந்த அணை கட்டப்பட்டது. அணை கட்டுமானப் பணியின்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அணையின் சிறப்பு
நாட்டிலுள்ள பிற அணைகளைப் போன்று முல்லை பெரியாறு அணை ஆற்றின் போக்கில் கட்டப்பட்டதல்ல. இரண்டு ஆறுகளின் போக்கைத் தடுத்து, அதன் எதிர் திசையில் சற்றேறக்குறைய 12 கி.மீ. தொலைவிலுள்ள தேக்கடி மதகுப் பகுதிக்கு நீர் மட்டத்தை உயர்த்தி தண்ணீர் பெறும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.
அதாவது, அணை அமைந்துள்ள இடம் மிக பள்ளமான பகுதியாகும். தண்ணீர் பெறக்கூடிய தேக்கடி மதகு உயரமான பகுதியாகும். ஆகையால் தேக்கடியில் அமைந்துள்ள மதகுப் பகுதிக்கு தண்ணீர் வர வேண்டுமானால், அணையின் நீர் மட்டம் குறைந்தது 106 அடி உயர வேண்டும். அப்போதுதான் அந்தத் தண்ணீரை தேக்கடி மதகிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பெற முடியும்.
பல்லுயிர்ச்சூழல்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கப் பகுதி 'ஏரி' என்றே அழைக்கப்படுகிறது. இந்த அணையில் தேக்கப்படும் 106 அடிக்குக் கீழுள்ள தண்ணீரை கேரளாவோ, தமிழ்நாடோ பயன்படுத்த முடியாது. ஆகையால் டெட் ஸ்டோரேஜ் எனப்படும் தேங்கு நீராகவே ஆண்டு முழுவதும் இந்த 106 அடிக்கு கீழுள்ள தண்ணீர் இருக்கும். 106 அடிக்கு மேல் நீர் மட்டம் உயரும்போதுதான், அந்தத் தண்ணீரை தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு எடுக்க முடியும்.
இதன் காரணமாக முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கப்பகுதி வனவிலங்குகளின் சொர்க்கமாகவே திகழ்கிறது. யானை, புலி, கரடி, சிறுத்தை. சிங்கம், மான் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களும் இங்கே மிகுந்த செழிப்புடன் வாழ்கின்றன.
காரணம் ஆண்டு முழுவதும் இங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீர், உள்ளபடியே சொல்லப்போனால் 136 அடி, 142 அடி தண்ணீர் என்று இங்கு பூதாகரப்படுத்தப்படுகின்ற பிரச்சனை என்பது, 106 அடிக்கு மேல் உள்ள 36 அடி தண்ணீர்தான்.
நீர் ஒப்பந்தம்
கடந்த 1886ஆம் ஆண்டு அக்டோபர் 29 கொல்லம் ஆண்டு 1062 துலா மாதம் 14ஆம் நாள் திருவாங்கூர் மன்னருக்கும், அன்றைய ஆங்கிலேய இந்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, 999 ஆண்டுகளுக்கு 7 பிரிவுகளின் கீழ் உரிமைகள் அளிக்கப்பட்டன.
- பெரியாறு அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் 155 அடி நில மட்டம் வரை உள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்.
- இதர கட்டுமானங்களுக்காக அருகே கூடுதலாக 100 ஏக்கர் நிலம்.
- 8 ஆயிரத்து 100 ஏக்கர் நிலங்களில் அணை கட்ட மற்றும் பிற பணிகளை மேற்கொள்ளும் உரிமை.
- குறிப்பிட்ட அந்நிலப்பரப்பில் விழும் மற்றும் ஓடும் தண்ணீர் முழுவதையும் பயன்படுத்தும் உரிமை.
- குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மரங்கள், காடுகள் ஒப்பந்த காலத்தில் புதிதாக வளர்க்கப்படும் மரங்கள் அனைத்திற்கும் உரிமை.
- மீன் பிடிக்கும் உரிமை.
- இந்தப் பகுதிகளில் அணை கட்டும்போதும், அதன் பின்பும் ஆள்கள் வாகனங்கள் போக்குவரத்திற்காக சாலைகள் அமைத்துக் கொள்ள ஏக்கருக்கு ரூ.5 குத்தகையுடன் உரிமை
என அந்த ஒப்பந்தத்தில் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 999 ஆண்டுகள் ஒப்பந்த நிறைவில் சென்னை மாகாணம் விரும்பினால், மேலும் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான சரத்து.
இதில் திருவாங்கூர் சமஸ்தானம் சார்பில் திவான் வி.ராமய்யங்கார், மராமத்து செயலாளர் கே.கே.கருன்லா, தலைமை வழக்கறிஞர் ஜே.எச்.பிரின்ஸ் ஆகியோரும் ஆங்கிலேய அரசின் சார்பாக ஜே.சி.ஹானிங்டனும் அந்த ஒப்பந்தத்தில் கையப்பமிட்டுள்ளனர்.
வதந்திகளை நம்பாதீர்
முல்லைப் பெரியாறு அணை குறித்து பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு வகையான வதந்திகள் கிளப்பப்பட்டன. அதிலொன்றுதான் அணை உடைந்து மக்களெல்லாம் அரபிக்கடலில் பிணமாய் மிதப்பார்கள் என்பது போன்ற கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியான ஆவணப்படம்.
முல்லைப் பெரியாறு அணை பல்வேறு காலகட்டங்களில் பலப்படுத்தப்பட்டே வந்துள்ளது. ஆனால், ஆதாரங்கள் அனைத்தையும் தவுடுபொடியாக்கும் நோக்கில் சிலர், அணையின் கட்டுமான தரம் குறித்து கேள்வியெழுப்பும் வகையில் பொய் வதந்திகளையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அணையின் பலம்
இந்த அணை இரண்டு மலைக் குன்றுகளுக்கிடையே கட்டப்பட்டுள்ளது அசாத்திய தொழில்நுட்பம் மட்டுமன்றி மிகப் பெரிய பலமாகும். அணையின் இரண்டு பக்கங்களும் கருங்கற்கள், சுண்ணாம்புக் காரை கொண்டு கட்டப்பட்டுள்ளன. இடைப்பட்ட பகுதிக்குள் சுண்ணாம்பு, செங்கல், ஜல்லி, மணல் ஆகியவைக் கலந்த சுர்க்கி கான்கிரீட் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
இது தவிர அணையைப் பலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு அவ்வப்போது மேற்கொண்டுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான டன் இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு அணையை விட ஏழு மடங்கு கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை, அங்கிருந்து 60 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.
கேரள அரசின் குற்றச்சாட்டின்படி முல்லைப் பெரியாறு அணைக்கு ஏதேனும் ஒன்றென்றால், இங்குள்ள தண்ணீர் அனைத்தும் அடர்ந்த காடுகளின் வழியே நேரே இடுக்கி அணையைத்தான் சென்றடையும். அப்படியிருக்க கேரளம் கிளப்பும் பீதி மலையாள நடிகர் பிருத்விராஜ் வரை தற்போதும் தொடர்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.
நீர் தேக்கும் அளவு
முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி என்றாலும்கூட, உச்சநீதிமன்றம் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று அனுமதியளித்த பிறகும், தற்போது வரை தமிழ்நாடு அரசு 136 அடி தண்ணீரைத்தான் தேக்கி வருகிறது. அணையின் அடிப்பகுதி மிகக் குறுகலானது. அணையின் முழு உயரமான 152 அடி உயரம் தண்ணீர் தேக்கினால் 10 ஆயிரத்து 570 மில்லியன் கன அடி நீர் அணையில் தேங்கும்.
அதே 136 அடியில் தேக்கினால் 6 ஆயிரத்து 118 மில்லியன் கன அடி நீரே கிடைக்கும். இந்த இடைப்பட்ட அடிகளில் தேங்கும் தண்ணீரின் பரப்பளவு மிக அதிகம் என்பதால் 4 ஆயிரத்து 452 மில்லியன் கன அடி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து இழப்பாகிறது என்பதே உண்மை.
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை 1924, 1933, 1940, 1943, 1961 மற்றும் 1977 ஆகிய காலகட்டங்களில் முழுக் கொள்ளளவான 152 அடியை எட்டியுள்ளது. அப்போதெல்லாம் அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் அணை முன்னர் இருந்ததைக் காட்டிலும் மேலும் பல மடங்கு வலுவுள்ளதாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்வது அவசியம்.
வரலாற்றுச் சின்னம்
பொறியியல் அதிசயமாகவும், நீரியல் தொழில் நுட்பமாகவும் இன்றளவும் போற்றி மதிக்கப்படுகின்ற முல்லைப் பெரியாறு அணை மாபெரும் வரலாற்றுச் சின்னம் மட்டுமன்றி, சமூக, பொருளாதார நீதியின் அடையாளமாகவும் திகழ்கிறது.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் இன்றளவும் உயிர்ப்புடன் திகழ்வதற்கு முல்லைப் பெரியாற்றின் தண்ணீரே மிக முக்கியக் காரணம். 135 ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட அதே கம்பீரத்துடன், முத்திருளப்பபிள்ளையையும் கர்னல் பென்னிக்குயிக்கையும் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.