மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிக என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 9 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். 3 பேர் திமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.
கரூர் மாவட்டத்தின் தலைவராக கண்ணதாசன் என்பவரும், துணை தலைவராக முத்துக்குமார் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2021 அக்டோபர் 22ஆம் தேதி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, திமுகவினர் குளறுபடி செய்தனர். இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
கரூர் மாவட்ட துணை தலைவர் பதவியை திமுகவினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி, கரூர் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால், தேர்தல் நடத்துவதாக கூறியுள்ள அன்று (மே 25), கரூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் முக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. அன்று கரூர் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்படும். கோயிலில்தான் காவல் துறையினர் பாதுகாப்பு இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொள்ளவே திமுகவினர் அன்று தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து நடத்த உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.