வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறுவிதமான கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலில் 7 அடி உயரத்தில் 400 கிலோ எடைகொண்ட ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
கோயிலை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இணைந்து திறந்துவைத்தனர். பின்னர் இருவரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
![மதுரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-06-jaya-temple-script-7208110_30012021161402_3001f_1612003442_813.png)
நிகழ்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர்.
முன்னதாக 120 பசுக்களுடன் கோ பூஜை, யாக சாலை பூஜைகள், கலச கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றனர். தொடர்ந்து 234 நலிவுற்ற அதிமுக தொண்டர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கினர்.
முதலமைச்சர் பேசுகையில், “இருபெரும் தலைவர்களுக்கு கோயில் அமைத்து அற்புதம் படைத்த ஆர்.பி. உதயகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த பின்னரும் மக்கள் மனத்தில் வாழும் தெய்வங்களாக இருபெரும் தலைவர்களும் விளங்குகிறார்கள்.
![மதுரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-06-jaya-temple-script-7208110_30012021161402_3001f_1612003442_11.png)
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்போடு பணியாற்றி வெற்றிபெறுவோம். நாடே வியக்கும் அளவில் பீனிக்ஸ் வடிவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து நமது நன்றியைச் செலுத்தியுள்ளோம். நாடு வளர்ச்சியடைய தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இருவருக்கும் பெருமைசேர்ப்பது எங்களது கடமை” என்று முதலமைச்சர் கூறினார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “மு.க. ஸ்டாலின் புது புது அவதார நாடகம் நடத்திவருகிறார். திமுகவினர் 10 வருடங்களாக கை நமநமத்துப் போயுள்ளனர். திமுக தப்பித் தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் காஞ்ச மாடு கம்பில் மேய்ந்த கதையாகிவிடும்.
தீய சக்திகளால் உருவான சவால்களை முறியடித்து 33 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிக்கச் சிலர் வேலை கையில் பிடித்துவருகிறார்கள். ஆளைப் பிடித்தாலும் வேலைப் பிடித்தாலும் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.