மதுரை-தேனி அகல ரயில் பாதை திட்டத்தின் கீழ், மதுரை-ஆண்டிபட்டி ரயில் நிலையங்களுக்கிடையே 58 கி.மீ. தொலைவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு பணிகள் மேற்கொண்டார். இதனிடையே ஆண்டிபட்டி-தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 17 கி.மீ. தொலைவிற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை ஓட்ட ஆய்வுகளை செய்தனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி-தேனி ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா நாளை (மார்ச் 31) ஆய்வு நடத்துகிறார். அதன்படி நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆண்டிபட்டியிலிருந்து தேனி வரையிலான பாதையை மோட்டார் டிராலியில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார்.
இதையடுத்து மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இதே ரயில் பாதையில் இன்ஜின் வேக சோதனை ஓட்ட ஆய்வுகளை நடத்துகிறார். இந்த ஆய்வுப் பணியின்போது ரயில்வே கட்டுமானத்துறை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொள்கின்றனர். இதன்காரணமாக சோதனை ஓட்டம் நடக்கும் நேரத்தில் பொதுமக்கள், ரயில் பாதைக்கு அருகில் குடியிருப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை - போடி அகல ரயில்பாதை திட்டம் - இன்று 2ஆம் கட்டமாக சோதனை ஓட்டம்!