மதுரை: பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி உள்பட பலர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மொத்தமாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி 28ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்குத் தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் மொத்தமாகவுள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2.5 விழுக்காடு மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிக்கை
இதனால், 40 சமூகத்தைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளை ஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் நீதிபதி துரைசாமி அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். இந்த அனைத்து வழக்குகளும் இன்று (செப்.20) நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர்களின் வாதம்
அப்போது 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரர் சார்பாக, பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர்.
அவர்கள் கூறியதாவது, 'பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டது. இது முரணான இட ஒதுக்கீடாக உள்ளது.
சாதிய ரீதியான கணக்கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமூகத்தினரை முன்னிறுத்தி சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தால் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலுள்ள மற்ற சாதி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என வாதிட்டனர்.
இதனையடுத்து, மனுதாரர்கள் தரப்பில் அதிகமான வழக்கறிஞர்கள் உள்ளதால், மனுதாரர் வழக்கறிஞர் வாதம் நாளையும் தொடரும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு (செப்.21) ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல்களில் மகளிருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும் - கனிமொழி