மதுரையில் உள்ள தனியார் உணவு விடுதியில் திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய மருத்துவர் சரவணன் இன்று (மார்ச் 16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஒரு சமூகமும் அவரவர்கள் தங்களது பிரசாரத்திற்கேற்ப இட ஒதுக்கீடு கோர உரிமை உண்டு. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சமூக நீதி காப்பாற்றப்படும்.
திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் அங்கு நான் தனித்துவத்தோடு செயல்பட முடியாத நிலை இருந்தது. சுயமரியாதை குறித்துப் பேசுகின்ற திமுகவில் அது இல்லை என்பதுதான் உண்மை. இதுகுறித்து திமுக தலைமையின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன். விசாரிக்கிறேன் என்று சொன்னார்களே தவிர எதுவும் செய்யவில்லை.
மதுரை வடக்கு தொகுதி நகர்ப்புறம் சார்ந்த பகுதி ஆகும். இங்கு தேசிய ஜனநாய கூட்டணி சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெறுவார்கள். ஆகையால் நிச்சயம் இந்த முறை வடக்கில் தாமரை மலரும்.
நான் ஒரு சமூக சேவகர். எந்த ஊழல் குற்றச்சாட்டும் என்மீது விழுந்ததில்லை. ஆகையால் எனக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது அதன் பொருட்டு நான் பாஜகவோடு இணைந்து செயல்படுகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு