ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என இரு வனக்கோட்டங்களும் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், தலமலை, கடம்பூர், விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்களும் உள்ளன.
இவை புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, கரடி, கழுதைப்புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளின் வாழ்விடமாக இருக்கின்றன. வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய என ஜூலை, டிசம்பர் மாதங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
வனவிலங்கு கணக்கெடுப்புப் பணி
இந்நிலையில் மழைக்காலத்திற்குப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்புப் பணி இன்று (டிச. 17) சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் தொடங்கியது.
இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வனத் துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் 380 பேர், ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் நேரடி காட்சிகள், கால் தடயங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அடையாளம் காணப்பட்டுக் கணக்கெடுக்கப்படுகிறது.
தாவர, மாமிச உண்ணிகள், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்கள் கணக்கெடுக்கப்படும். வரும் 22ஆம் தேதிவரை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கு அளிக்கப்படும்.