ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தாளவாடி பேருந்து நிலையம், பூஜேகவுடர் வீதி, சேஷன் நகர், கனகதாசர் கோயில், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக பூஜேகவுடர் வீதி, சேஷன் நகர், கனகதாசர் கோயில், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பேருந்து நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அனைத்துச் சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தாளவாடி பள்ளத்தில் கரைக்கப்பட்டது.
இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.