ஈரோடு: தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காவல் நாயை கொன்ற சிறுத்தையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. பாரதிபுரம் வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை சூசைபுரம், தொட்டகாஜனூர் ஆகிய ஊர்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை ஊருக்குள் வராதபடி பட்டாசு வெடித்து துரத்தி வருகின்றனர்.
இச்சூழலில் பாரதிபுரத்தில் சித்தன் என்பவர் தோட்டத்தில் ஆடு, மாடுகளை பராமரித்து வருகிறார். கால்நடைகளின் காவலுக்கு 2 காவல் நாய்களை வளர்த்து வந்தார். இவ்வேளையில் வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சித்தன் தோட்டத்தில் புகுந்து அங்கு கட்டப்பட்டிருந்த நாய்களை கடித்து குதறியது.
தொடர்ந்து அங்கு கம்பத்தில் கட்டியிருந்த நாயைக் கடித்துக் கொன்ற சிறுத்தை, மற்றொரு நாயை காட்டுக்குள் இழுத்துச்சென்றது. அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த சித்தன், காவல் நாயை சிறுத்தை கடித்து கொன்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வனத்துறையைினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார்.
வனத் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, அங்கு சிறுத்தையின் கால்தடத்தை கண்டறிந்தனர். தற்போது அந்த இடத்தில் கண்காணிப்புப் படக்கருவி வைத்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.