சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள பவானிசாகர் அணை சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தற்போது நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணை நீர் தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டி நீர் தேக்கப்பகுதி உள்ளதால் தற்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்குக் காணப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, சைபீரியா, இந்தியாவின் வடமாநிலங்கள் என பல இடங்களிலிருந்து, இங்கு பலவிதமான பறவைகள் வந்து தங்குவதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் எனப் பல வகை பறவைகள் காலை, மாலை நேரங்களில் நீர் தேக்கப்பகுதியில் உள்ள மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. மேலும், இரவு நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இப்பகுதி மிகவும் அமைதியாக உள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவதாகவும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.