ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள, பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, கடம்பூர், தாளவாடி, கேஎன் பாளையம் உள்ளிட்ட ஊர்களின் எஸ்பிஐ வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
வங்கியின் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களும் பங்கேற்றனர். பிள்ளைகளின் மேல்படிப்புக்கு கல்விக்கடன் வழங்குவதில்லை, நெசவாளர்களுக்கு கடன் வழங்குவதில்லை, பயிர்க்கடன், விவசாயக் கடன் கேட்டால் மணிக்கணக்கில் நிற்க வைத்து திருப்பி அனுப்புகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை வாடிக்கையாளர்கள் முன்வைத்தனர். வங்கிக்கணக்கு பதிவு செய்யும் எந்திரம் எப்போதும் பழுதாகியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.