ஈரோட்டில் 16 வயது சிறுமியின் தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து, சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயார் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவரது இரண்டாவது கணவர் ஹரிஹரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இடைத்தரகர் கேகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சிறுமியில் வயதை அதிகரித்துக் காட்ட போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜோஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுமியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுமியிடம் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஈரோடு சூரம்பட்டி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட 5 மருத்துவமனைகளுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. அதில் சிறுமியிடம் கருமுட்டை பெற்றது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
அதன்படி இன்று (ஜூன் 11) மருத்துவர்கள் ஈரோடு போலீசாரிடம் நேரில் ஆஜராகினர். இவர்களிடம் ஈரோடு மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.