ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூடக்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி பரப்புரை செய்தார்.
கூடக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த குப்புசாமி, ஆறாவது வார்டு உறுப்பினர் ரகுபதி என்பவர் உடல்நிலை காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து காலியாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவிக்காக கூடக்கரை ஊராட்சியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.பி. சண்முகசுந்தரம், ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக உறுப்பினர் பழனிசாமி ஆகியோரை ஆதரித்து கூடக்கரை ஊராட்சி மோடர்பாளையம், தொட்டிபாளையம் பகுதிகளில் சு. முத்துசாமி வாக்குகள் சேகரித்தார்.
இடைத்தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய முத்துசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுகாக கொண்டுவந்த 505 திட்டங்களில் 202 திட்டங்கள் நிறைவேற்றி செய்துவருவதாகவும், மேலும் பல திட்டங்களை வகுத்துக் கொண்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள் திடங்களை முழுமையாக நிறைவேற்ற அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.