ஈரோடு: நாடு முழுவதும் சிறுமி கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஈரோட்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் நல அமைப்பு, அனைத்து மாவட்ட மகளிர் காவல்துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 14 ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு குழந்தை திருமணம் மற்றும் இளவயது கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 14) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சைல்டு ஹெல்ப்லைன்(Child helpline), மகளிர் காவல் நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தை திருமணம் ஏன் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் இளம் வயது கர்ப்ப காலம் குறித்தும் விவரிக்கப்பட்டது.
மேலும், குழந்தை திருமணம் செய்து வைத்தால் அவர்கள் மீது எடுக்கப்படும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோன்று விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன் ஊராட்சி மன்ற தலைவர்களை கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சிறுமியிடம் சினை முட்டை பெற்ற விவகாரம்: விரைவில் 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!