ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய தம்பதியினர் விவசாய நிலத்தை மீட்டுத் தரக்கோரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாணிபுத்தூர் பகுதியைச்சேர்ந்தவர் சுந்தரம்-பாப்பாத்தி தம்பதியினர். இவர் தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 64 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு சுந்தரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால், தனது நிலத்தை அப்பகுதியிலுள்ள பாலு என்பவரிடம் அடமானமாக வைத்து ரூ.60 ஆயிரம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சுந்தரம், கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.60 ஆயிரம் பணத்திற்கு வட்டியும் அசலுமாக 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதனிடையே, தான் அடமானம் வைத்த நிலத்தை திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு பாலு, அப்போது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாகவும் நிலம் வேண்டும் என்றால், 25 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று விரட்டியடித்துள்ளார்.
இதனால், தனது விவசாய பூமியை தனது அனுமதியில்லாமல் விற்றுவிட்டதாகவும்; அதனை மீட்டுத்தருமாறும் இது தொடர்பாக கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இன்று (ஆக.21) வந்த சுந்தரம்-பாப்பாத்தி தம்பதியினர் திடீரென தாங்கள் கொண்டுவந்த மண்ணெண்ணெயினை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் இருவரையும் மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். கந்துவட்டிக்கொடுமையினால் நிலத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு நிலத்தை மீட்டுத் தரவேண்டும் எனக் கோரி விவசாய தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்... குளத்தில் கவிழ்ந்து விபத்து... 20 பேர் படுகாயம்