ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் அனுமதியின்றி சிலர் மீன்பிடிப்பதாக பவானிசாகர் மீன்வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் வாணிஸ்ரீ-க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மீன்வளர்ச்சிக் கழக அலுவலர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீன் குத்தகைதாரர் சம்பத்குமார் உள்ளிட்டோர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது நீர்த்தேக்கப் பகுதியில் அனுமதியின்றி வலைபோட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து பவானிசாகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இருவரும் பவானிசாகர் புங்கார் காலனியைச் சேர்ந்த லூர்துசாமி, குமரேசன் என்பது தெரியவந்ததுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 40 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது.
மீன்வளர்ச்சிக் கழக அலுவலர்கள் அளித்தப் புகாரின் பேரில் பவானிசாகர் காவல் துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைத்தனர்.