கோயம்புத்தூர்: பொள்ளாச்சி குமரன் நகரில் கடந்த 22ஆம் தேதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட மேலும் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி குமரன் நகரில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 நான்கு சக்கர வாகனம், 2 ஆட்டோ ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள், இரண்டு வாகனங்களின் மீது டீசல் ஊற்றி எரிக்கவும் முயற்சித்தனர்.
இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில், பொது உடைமைகளை சேதப்படுத்துதல் மற்றும் வெடி பொருட்களை கையாளுதல் போன்ற சட்டப்பிரிவின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தீவிர வாகன சோதனை , 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, 500க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த முகமது ரபிக்(26), ரமீஸ் ராஜா(36), மாலிக் என்கின்ற சாதிக் பாஷா(32) ஆகிய 3 நபர்களை கடந்த 26ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், கண்காணிப்பு கேமராவை ஆய்வு
செய்ததின் பேரிலும் இவ்வழக்கில், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த வால்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளரான மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ஜலீல்(34), தற்போது தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்களான பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த முகமது ரஃபீக்(31) மற்றும் பல்லடம் ரோடு ராமகிருஷ்ணசாமி லே அவுட்டை சேர்ந்த ரகுமான் அலி(24) ஆகிய மூவரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்து இளைஞர் முன்னணி நிர்வாகி கார் தாக்குதல் விவகாரம் - இருவர் கைது