கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினசரி கோவை மாநகருக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கானோர் பேருந்தில் பயணித்துச் சென்று வருகின்றனர். அப்படிச் செல்லும் பயணிகள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவியும்போது பேருந்து பற்றாக்குறையால் பயணத்தின்போது படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர்.
பேருந்துகளும் அதிவேகமாகச் செல்லும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அதில் அதிக அளவில் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உருவாவதாக அன்னூர் காவல்நிலையத்தில் சிலர் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்று காலை அன்னூர் காவல்நிலையம் முன்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிவேகமாக வந்த பேருந்துகள் மற்றும் அதிகப் பயணிகளை ஏற்றிக்கொண்டு படிக்கட்டில் தொங்கியபடி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என அனைத்தையும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார், அதிவேகமாக வந்த பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்த நிலையில், படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டனர்.
மேலும் பள்ளியில் பாடம் எடுப்பதுபோல், இனிமேல் நாங்கள் படிக்கட்டில் தொங்க மாட்டோம் என உறுதிமொழி வாசிக்கவைத்து அனுப்பிவைத்தனர். அதே சமயத்தில் மேலும் இதேமாதிரி பயணிகளைப் படிக்கட்டில் தொங்க வைத்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேருந்து ஓட்டுநர்களிடம் காவல் துறையினர் எச்சரிக்கை செய்தனர்.
இதையும் படிங்க:Video: உரிய பாதுகாப்பு இன்றி சாக்கடையைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்!