கோயம்புத்தூர்: கோவை ஒண்டிப்புதூர் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஒண்டிப்புதூர் பகுதியில் ரங்கநாதன் உட்பட 5 பேர் நேற்று காலை 6 மணிக்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பணியாளர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரங்கநாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் எதிரொளியாக சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையின் பிணவறையை முற்றுகையிட்டனர். மேலும், பிணவறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், படுகாயம் அடைந்தவர்களுக்கும் உயிரிழந்த ரங்கநாதனின் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும், தூய்மை பணியாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனையை வரதட்சணை வழக்காக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்!