கோயம்புத்தூர்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (60) என்ற கட்டிட தொழிலாளிக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோகரனை தொடர்பு கொண்ட முருகானந்தம், தன்னிடம் சக்தி வாய்ந்த இரிடியம் இருப்பதாகவும், 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் இரிடியத்தை தந்துவிடுவதாகவும் கூறி கோயம்புத்தூர் வரவழைத்துள்ளார்.
இதனை நம்பி மனோகரன் 30 லட்சம் ரூபாயுடன் கடந்த 18ஆம் தேதி இரவு கோயம்புத்தூர் சென்று, சிங்காநல்லூர் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதுகுறித்து முருகானந்திற்கு தகவல் அளித்த நிலையில், நேற்று (ஏப். 19) மனோகரன் அறைக்கு வந்த இருவர், தங்களை முருகானந்தம் மற்றும் கண்ணப்பன் அனுப்பி வைத்ததாக கூறி பெட்டியை கொடுத்துள்ளனர். நான்கு மணி நேரம் கழித்து பெட்டியை திறக்கும்படி கூறிவிட்டு, பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
பெட்டியை பெற்றுக் கொண்ட மனோகரன், சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்த போது, அதில் செங்கல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், முருகானந்தம், கண்ணப்பன் உட்பட நால்வரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூவாகம் கூத்தாண்டவர் தேர்த் திருவிழாவில் சுவர் விழுந்து 10 பேர் படுகாயம்