கோயம்புத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த வளமான தமிழகத்துக்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகள் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “வணக்கம்.. இன்று கோயம்புத்தூர் வந்தடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தொழில் நகரம். புதுமைகள் படைக்கும் நகரம். இன்று கோயம்புத்தூருக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.
பவானிசாகர் அணையை நவீனப்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நல்ல பலனைப் பெறும். இது விவசாயிகளுக்கு நல்ல பலனை அளிக்கும். தற்போது எனக்கு திருவள்ளுவரின் குறள் ஒன்று ஞாபகம் வருகிறது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே வாழ்கின்றவர். மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே” என்றார்.