பொள்ளாச்சி நகராட்சியில் 189 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக நகரத்திலுள்ள 36 வார்டுகளிலும் குழாய் பதிப்பதற்காக சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது, ஒரு சில பகுதிகளில் தார் சாலைகள் போடப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் போடப்படாததால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என தன்னார்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து, இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் பார்க் வீதியில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை மண்ணை நிரப்பி செப்பனிடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பொள்ளாச்சியில் உள்ள சாலைகளை நகராட்சி நிர்வாகம் செப்பனிட நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்கள் உதவியுடன் சாலைகளை சீரமைப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.