சென்னை மாநகராட்சி கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தனிக்கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
மேலும் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டவர்களின் விழுக்காடு 50-ஐ கடந்து உள்ளது. சென்னை மாநகரில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்த தகுதியுடைவர்கள் மொத்தம் 55 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர். அதில் 45 லட்சத்து 45 ஆயிரத்து 826 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அது மொத்த மக்கள் தொகையில் 82 விழுக்காடு ஆகும்.
அதேபோல 30 லட்சத்து 786 பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அது மொத்த மக்கள் தொகையில் 54 விழுக்காடு ஆகும். சென்னை மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் இதுவரை 18 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்தவில்லை.
மேலும் 28 விழுக்காட்டினர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திவிட்டு இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.