கோவை மாவட்டம், குரும்பபாளையம் அடுத்த வரதையங்கார் பாளையத்தில் சங்கமம் ஒயிலாட்ட குழுவின் 33- ஆவது அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு கிராமிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”தமிழ் சினிமாவில் மனம், மண் சார்ந்த படங்கள் வருவதில்லை என்றும் அதிக அளவில் சாதி படங்கள் வருவது வேதனைக்குரியது.
கிராமிய கலைஞர்கள் சாதி,மதம் பார்ப்பதில்லை என பேசியவர், கலைகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் பல இடங்களுக்குச் சென்று சங்கமம் கலைக்குழுவினர் இலவசமாக ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறினார்.
பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 5 மணி நேரத்திற்கு மேலாக நடனம் ஆடுவதாகவும், அழிந்து வரும் ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை பெண்கள் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இதுவரை 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒயிலாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் பல்வேறு வெளிநாடுகளிலும் ஒயிலாட்ட அரங்கேற்றம் நடைபெறும் என சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாகனம் மோதியதில் உயிரிழந்த புள்ளி மான் - இளைஞர்கள் திடீர் சாலை மறியல்