கோவை: மத்திய அரசு வெட்கிரைண்டர் மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பப்பெற வலியுறுத்தி கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில தினங்களுக்கு முன் வெட்கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5%-18% ஆக உயர்த்தப்பட்டதைத் திரும்பப் பெறக் கோரி பலமுறை வெட்கிரைண்டர்கள் சங்கத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும் வந்தனர். இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்க தலைவர் செளந்தர்குமார் தலைமையில், இன்று (செப்.14) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறுந்தொழில் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், செளந்தர்மோகன் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தலைவர் செளந்தர்குமார் செய்தியாளர்களிடத்தில், மத்திய அரசு 47ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங்கில் வெட்கிரைண்டர் மீது ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியதாகவும் அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், எங்கள் சங்கம் எந்த அரசை எதிர்த்ததும் அல்ல; எந்த கட்சியையும் சார்ந்ததல்ல எனக் கூறினார்.
ஜி.எஸ்.டி வரி உயர்விற்கு முன் கல் பிரச்னை வந்ததாகவும், அதனைத் தொடர்ந்தே, மூலப்பொருட்களின் விலை உயர்வு வந்ததாகவும் இதனால், மிகப் பெரிய அளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 18% ஜி.எஸ்.டி வரி உயர்வால் இன்னும் பாதிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் வாங்கும் மக்களும் குறைந்து விட்டனர் எனத் தெரிவித்தார்.
இதனால், தங்களது வியாபாரம், உற்பத்தி, அனைத்தும் குறைந்து, இத்தொழிலை நம்பி இருக்கக்கூடிய பெண்கள் உட்பட 30,000-க்கும் மேலான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். எனவே, அரசு இந்த வரி உயர்வைத் திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அரசு துறையினருக்கு அண்ணா பதக்கம்....தமிழ்நாடு அரசு ஆணை ...