கோவை சூலூர் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாசாணம் (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூலை27) அந்த இளைஞர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் மாசாணம் வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் தனியாக இருந்த மாசாணத்தை உருட்டு கட்டையால் தாக்கியதுடன், கத்தியால் குத்தியதில் மாசாணம் மரணமடைந்தார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் மாசாணம் வீட்டிலிருந்து வெளியே வராத காரணத்தால் அவரது தந்தை சென்று பார்த்தபோது மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த சூலூர் காவல்துறையினர் மசாணத்தின் உடலை கைபற்றி உடல்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாகவுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலைவீசி தேடிவருகின்றனர்.