கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் ஊரட்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொழிற்சாலை மற்றும் விவசாயம் பிரதானத்தொழிலாக இந்தப் பகுதியில் இருந்து வருகிறது.
போதிய மழை பெய்யாததாலும், நீர் தட்டுப்பாட்டாலும் விவசாயமும் குறைந்த நிலையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் இந்தப் பகுதியில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள நீரின் நிறம் மாறி காட்சி அளிக்கிறது.
ரசாயனக் கழிவுகளால் கெடும் நிலத்தடி நீர்: இதனால், அதனை விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தமுடியாமல் உள்ளதாக அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர். இதுகுறித்து கணியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், '40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்த நிலையில், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் பூமிக்கு அடியில் நேரடியாக சுத்திகரிக்கப்படாமல் செலுத்தப்படுகிறது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாகக் கிணற்று நீரின் தன்மை மாறிவிட்டதால் இங்குள்ள விவசாய மக்கள் விவசாயத்தைக் கைவிட்டனர். அத்தோடு, கிடைக்கும் நீரை கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளாக, கால்நடை தீவன வளர்ப்புக்கு தங்களது கிணற்று நீரைப் பயன்படுத்தியதில் தீவனப்பயிர்கள் காய்ந்து கிணற்று நீர் களைக்கொல்லியாகவே மாறிவிட்டது கவலை அளிக்கிறது' என்றனர்.
மேலும், இந்த நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் நீர் பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல எனவும்; ரசாயனக் கழிவுகள், இரும்பு ஆகியவற்றின் தன்மை அதிகம் உள்ளதால் இதனைப் பயன்படுத்தக்கூடாது எனவும் ஆய்வு முடிவில் வந்துள்ளதாகவும்; இந்த நீர் மக்களுக்கும் விவசாயத்திற்கும் ஆபத்தாகி போய் விட்டதாகவும் வருந்தினர்.