கோயம்புத்தூர்: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (டிசம்பர் 14) மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, பொள்ளாச்சியிலும் துணை ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்த அமைப்பின் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில், மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகையை தெலங்கானா, புதுச்சேரி போல் மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தியும், கடும் ஊனமுற்றோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் எழுப்பப்பட்ட பிற கோரிக்கைகள்
- 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊராட்சிகளில் தனிக்குழு அமைத்து அரசாணைப்படி நான்கு மணி நேர வேலை மற்றும் முழு வேலையை உறுதிப்படுத்த வேண்டும்
- நீதிமன்றம், மத்திய அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளை, 35 கிலோ அரிசி வழங்கும் அட்டைகளாக மாற்றிட வேண்டும்
- வீடு இல்லா மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும்
- கிராமங்களில் முகாம் நடத்தி அடையாளச் சான்று இல்லாதவர்களுக்கு உடனடியாகச் சான்று வழங்க வேண்டும்
- பேருந்து பயண உதவியாளர், ரயில் பயண சலுகை ஆகியவற்றிற்கான சான்றிதழை உள்ளூரிலேயே வழங்க வேண்டும்
போராட்டத்தின் முடிவில் மறியலில் ஈடுபட முயற்சித்த மாற்றுத்திறனாளிகள் 20 பெண்கள், 60 ஆண்கள் என மொத்தம் 80 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்