சென்னை: திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சவுகத். இவர், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பரனா என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடம் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுகத், பரனாவை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.
இரண்டு திருமணம்
இவர், ஒரு மாதத்திற்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த சல்மா (24) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வந்தார். சல்மா, ஐஸ் ஹவுஸ் பகுதி கபூர் சாகிப் தெருவில் ஆட்டுக்கால் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், சவுகத்-ன் முதல் மனைவி பரனாவின் தம்பிகள் தீன் முகமது, ஜாஹிர் உசேன் ஆகியோர் இரண்டாவது மனைவி சல்மாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
நேற்று (ஆகஸ்ட் 10) பேச்சுவார்த்தைக்காக தீன் முகமது, சல்மாவை கபூர் சாஹிப் தெருவிற்கு வரவழைத்தார். தீன் முகமது, ஜாஹிர், முஸ்தபா ஆகியோர் இருந்தனர்.
பெண்ணை தாக்கியவர்கள் கைது
அங்கு பேசி கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அப்போது திடீரென தீன் முகமது, ஜாஹிர் உசேன் ஆகியோர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சல்மாவை சரமாரியாக வெட்டினர்.
இதில், சல்மாவின் விரல், தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக சல்மாவின் கணவர் சவுகத், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சல்மாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீன் முகமது, ஜாகீர் உசேன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, சல்மாவை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கடப்பாரையால் தாக்கி மனைவியைக் கொலை செய்ய முயற்சி - கணவன் கைது