சென்னை: எழுத்தாளர் இளவேனில் நினைவேந்தல் நிகழ்வு மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு தலைமையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் எழுத்தாளர் இளவேனில் புகைப்படத்தைத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எழுத்தாளர் இளவேனில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இளவேனில் எனக்கு மார்க்ஸ் சித்தாந்தம் குறித்து தொடர்ந்து எடுத்துரைத்து, என்னை அதன்மீது ஈடுபட வைத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
கருணாநிதியுடன் நெருக்கமாக இருப்பது சாதாரண காரியமல்ல. குறிப்பாக ஒரு படைப்பாளி கருணாநிதிக்கு நெருக்கமாக வேண்டுமென்றால், அவரை அசைத்துப் பார்க்க வேண்டும். அதை இளவேனி எழுத்துகள் செய்துள்ளது. நான், திருமாவளவன், பாலகிருஷ்ணன் ஒரே மேடையில் இளவேனியைப் போற்றுகிறோம். நாங்கள் வெவ்வேறு இயக்கம் என்றாலும், அவரை போற்றுகிறோம் என்றால் அவர் தனி மனிதர் அல்ல; தத்துவத்தின் மனிதர் எனத் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உரையில், “தமிழ்நாட்டின் கார்க்கி எனப் போற்றப்படும் இளவேனில் நிறையக் கனவுகளுடன் இருந்தார். அவரின் திடீர் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டு மொத்த தேசம், சனாதன சக்திகளிடம் இருந்து மீளும் என்ற கனவுடன் இருந்தார். இளவேனி 70, 80 காலகட்டத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியவர்.
ஏராளமான முனைப்புகளுடன் இருந்த அவர், நம்முடன் தற்போது இல்லை. அது ஒரு வெறுமை, வேதனையைத் தருகின்றது. பெரியார் பார்வை மார்க்சியம் பார்வை தான். கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் மேல் உள்ள ஈடுபாட்டால், தான் தனது மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் வைத்துள்ளார். வரும் தேர்தலில் வெற்றிபெற்று, முதலமைச்சராகவுள்ள ஸ்டாலின், மாநிலத்தின் செயலாற்றும் தலைவராக விளங்குவார் என்பதை உணர்ந்து இந்த பெயரை கருணாநிதி வைத்துள்ளார்” என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, “இளவேனில் மறைவு செய்தி நமக்கு இடியாக வந்தது. தான் ஒரு எழுத்தாளர் என்ற அடையாளம் கொண்டு, மக்கள் மத்தியில் முத்திரை பதித்தவர்.
ஒரு நூலை ஒவ்வொரு முறையும் எடுத்துப் படிக்கும் போது ஒரு வித பலம் கிடைக்கும் என்றால், அது இளவேனில் நூலாகத் தான் இருக்கும். இந்தியாவைப் பாசிச ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இளவேனில் போன்றவர்கள் எழுதிவைத்துச் சென்ற நூல்களின் பங்கு அவசியமாகிறது. ஒரு மாறுபட்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் பணிகளைச் செய்தவர் இளவேனில்” என்றார்.