வேளாண் தொழில்முனைவோர், பண்ணை மற்றும் பண்ணைசாரா வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைத்து மதிப்புக் கூட்டுதல், வேளாண்
பதனீட்டு தொழில் முனைவு குறித்த கருத்தாய்வுக் கூட்டம், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி.பொன்னையன் தலைமையில் காணொலி வாயிலாக சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கை குழு உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம், துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
விவசாயம், அதன் தொடர்புடைய துறைகளில் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும், தொழில் பல்வகைப்படுத்துதல் மூலம் விவசாயிகளுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் பற்றி இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி.பொன்னையன், "விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு தீர்வுக்காண மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டுச் செல்ல வேண்டும். மேலும், வேளாண் துறையில் தொழில் முனைவு நிறுவனங்கள் மற்றும் வேளாண் பதனீட்டு துறையில் மதிப்புக் கூட்டு முறையிலான நிறுவனங்கள் சிறந்து விளங்குகின்றன" என்றார்.