சென்னை: மயிலாப்பூர் போலீசார் நேற்று முன்தினம் (மே. 22) தனியார் கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கெவின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக விகடன் குழுமத்தின் நிர்வாகிகளுடன் நெருக்கமானவர் எனக் கூறிக்கொண்டு, ஜி ஸ்கொயர் நிறுவனத்தை பற்றி அவதூறாக ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிடப்பட்டதாகவும், தொடர்ந்து அவதூறு செய்திகள் வெளியிடாமல் இருக்க சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கெவின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விகடன் குழும நிர்வாகிகள் மற்றும் சவுக்கு சங்கர், பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீதும் இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் ஜூனியர் விகடன் சார்பில், விகடன் குழுமமானது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில் 23.01.2022 தேதி இடப்பட்டு வெளியிடப்பட்ட ஜூனியர் விகடனில் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கு, ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள கெவின் என்பவருக்கும் விகடன் குழும நிர்வாகிகளுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என பிப்ரவரி மாதம் விளக்கம் அளித்து இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 18.1.2022 என்ற தேதியில், அடுத்து வருகின்ற ஜூனியர் விகடன் இதழில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிடப்படும் என கெவின் என்பவர் கூறி மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னதாகவே 23.012022 தேதியிட்ட இதழ் பதிப்புகள், மிரட்டப்பட்டதாக கூறப்பட்ட 18 ஆம் தேதி இரவு முன்னரே முடிக்கப்பட்டு, விநியோகத்திற்காக அனுப்பப்பட்டு விட்டது என விகடன் குழுமம் தரப்பில் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளிவருவதற்கு முன்பு ஜூனியர் விகடன் செய்தியாளர் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா என்கிற ராமஜெயத்தை தொடர்புக்கொள்ள முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எந்தவித பதிலும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை எனவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக முறையாக தொடர்புக் கொள்ளாமல் விளக்கம் அளிக்காமல், பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்ட கதைகளை வைத்து வக்கீல் நோட்டீஸ் ஜி ஸ்கொயர் நிறுவனம் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி குறித்து கேட்கப்படும் போது ஜி ஸ்கொயர் நிறுவனம் தரப்பில் இருந்து அதன் நிறுவனர் பாலா பதில் அளித்திருந்தால், அதையும் செய்தியில் பதிவிட்டு இருப்போம் என விகடன் குழுமம் புகாரில் தெரிவித்துள்ளது.
ஆனால் வேண்டுமென்றே விகடன் குழுமத்தை பற்றி அவதூறு பரப்பும் வகையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா என்கிற ராமஜெயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கெவின் செயல்பட்டுள்ளதாக விகடன் குழுமம் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு, பிப்ரவரி 7ஆம் தேதி விகடன் குழுமம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மிரட்டல் வந்ததாக கூறப்படும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் நான்கு மாதம் கழித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில், ஜி ஸ்கொயர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் இல் பிப்ரவரி மாதம் அனுப்பிய தகவலை புகாராக கொடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே விகடன் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா என்கிற ராமஜெயம் மற்றும் கெவின் ஆகியோர் செயல்பட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விகடன் குழுமம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விகடன் நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் சட்டவிரோதமாக நடைபெறும் டிஜே பார்ட்டி: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய காவல் துறை