விஜய ரகுநாத நாயக்கர் என்பவரால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி செப்பு பட்டயம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோயிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து, எல்லை வரையறை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய கோயில் தனி அலுவலர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆக்கிரமிப்பில் உள்ள அந்த நிலங்களை மீட்பதுடன், கோயிலிலிருந்து மாயமான செப்பேடுகளை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும், அதற்காக மாவட்ட நீதிபதியை நியமிக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பட்டயத்தில் குறிப்பிட்ட நிலங்கள் 7 கிராமங்களில் பரவியுள்ளதாகவும், 205 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சில நிலங்கள் அரசின் பயன்பாட்டிலும், மாயமான பட்டயம் தற்போது அறநிலையத்துறை பாதுகாப்பில் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கோயில் நிலங்கள் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, அறநிலையத்துறை வசம் தற்போது இருக்கும் பட்டயம் போலியானது என்றும், அசல் பட்டயம் அறநிலையத்துறையின் ஓய்வுபெற்ற ஆணையர் வீட்டிலிருந்ததாகவும், 1991-2021 வரை எங்கிருந்தது என விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வாதிட்டார்.
பட்டயத்தின் உண்மைதன்மை குறித்த ஆய்வு தொல்லியல்துறை முன்பு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், செப்புப் பட்டயம் குறித்த தொல்லியல் துறை அளித்த விளக்கத்தையும், மொழி மாற்றத்தையும் மனுதாருக்கு வழங்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதம் இறுதி வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் நிர்வகிக்க உயர்நீதிமன்றதில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: பேரறிவாளனை நீதிமன்றமே ஏன் விடுவிக்கக் கூடாது? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி