சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25) கேள்வி நேரம் முடிந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்களை மாநில அரசு தேர்வு செய்யும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தமிழ்நாடு அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உயர்கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலை தூக்கியிருக்கிறது. இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது. துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும். ஆளுநர் - மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும்.
துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது. இதே நிலை தான் கர்நாடகம், தெலங்கானாவிலும் உள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: கோயில்களை காப்போம்! கோவையை காப்போம் - இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்