ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள், இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆலையை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகள் பாதுகாப்பு சட்டம் 1977இன் படி, மத்தியில் 17.33% ஜி.டி.பியையும், மாநிலத்தில் 3.3% ஜி.டி.பியையும் வருவாயாக ஈட்டும் நிறுவனத்தை மூட மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு இல்லை.
கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி தற்காலிகமாக ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்ட நிலையில், உரிய ஆதாரங்கள் இல்லாமல் மே 28ஆம் தேதி மாநில அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆலையை நிரந்தரமாக மூடியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை மாசுபாடு இல்லை என தெரிவித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூடிய பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்தார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ஃபாத்திமா பாபு, வைகோ உள்ளிட்டவர்கள் உள்நோக்கத்துடன் தொடர்ந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதம் செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் தரப்பு வாதம் நாளையும் நடக்க இருக்கிறது.
இதையும் படிங்க: டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கம் செல்லாது!