ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தினேஷ் (33). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி தினேஷ், தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, அங்கு திடீரென்று 2 இளைஞர்கள் வந்து உள்ளனர். பின்னர், அவர்கள் காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனைப் பார்த்த தினேஷின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் அவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார்.
![ஆவடி அடுத்த அயப்பாக்கம் கார் கண்ணாடியை உடைத்ததால் 2 பேர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-avadi-car-glass-broken-2-remand-tn10062_25012022074640_2501f_1643077000_1014.jpg)
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் இளைஞர்களை தேடி வந்தனர்.
இதில், கார் கண்ணாடியை உடைத்தது, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவன் சந்தோஷ் (21), அயப்பாக்கம், தேவி நகரைச் சார்ந்த கிருஷ்ணகுமார் (21) ஆகியோர் எனத் தெரியவந்தது.
அதன் பிறகு, தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் இன்று (ஜன.25) பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த டிசம்பர் மாதம் சந்தோஷ் அயப்பாக்கம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த தினேஷின் கார் சேற்றை வாரி அடித்து விட்டு சென்று உள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறுடன் கைகலப்பும் ஏற்பட்டு உள்ளது.
இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, ஆத்திரம் அடைந்து சந்தோஷ், தனது நண்பர் கிருஷ்ணகுமாரிடம் சேர்ந்து தினேஷின் கார் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சந்தோஷ், கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், காவல்துறையினர் இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து பணம் பறிக்கும் திமுக பிரமுகர்- இளம்பெண் கண்ணீர்