சென்னை: பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு
மேலும், தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையிலான கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும்.
அதேபோல் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் அருந்ததியர் ஒதுக்கீட்டிற்கான இடங்களில் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிட இனத்தினர் சேர்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 24, 25ஆகிய தேதிகளில் இணையவழியில் நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள்
பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆக.24ஆம் தேதி வரை, tneaonline அல்லது www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றது. இதில், விளையாட்டு வீரர்கள் 2,426 பேர் உள்பட, ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்துள்ளது.
மேலும், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன.