சென்னை: சபாநாயகர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவருடைய தனி செயலர் மூலமாக என்னிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த கடிதம் என்னுடைய பரிசீலணையில் உள்ளது என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இதுவரை எனக்கு எந்த கடிதமும் வரவில்லை என கூறிய அவர் சட்டப்படி, விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். எந்தவிதமான வெறுப்பு இல்லாமல் ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் பரிசளித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.
அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் எடுக்க முடிவே இறுதியானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் விரைந்து குடியரசு தலைவர் மற்றும் மத்திய அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைப்பது அது மக்களை அவமதிக்கும் செயல் என சபாநாயகர் கூறினார். குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் புதிய கிளை திறப்பு