இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வினை சிறப்பாக முடித்த ராதாகிருஷ்ணன், 1994ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகப் பதவியேற்றார். 2004ஆம் ஆண்டு கும்பகோணம் தீ விபத்தின்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவரது நடவடிக்கைகள் வெகுவாக பாராட்டப்பட்டது. எனினும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இவரின் சுனாமி பேரிடர் மீட்புப் பணிதான். தஞ்சாவூர் மாவட்டத்தில் இவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தை பெற்றது.
வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் இருந்தும், இலங்கையிலிருந்தும் பேரிடர் மீட்புப் பணி தொடர்பான இவரது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. மார்ச் 2009 முதல் மார்ச் 2012 வரை ஐக்கிய நாடுகள் அவை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு தலைமை வகித்தார்.
2012 செப்டம்பரில் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை செயலராக நியமனம் செய்யப்பட்டார். 2019 வரை அதே துறையில் செயல்பட்ட அனுபவம் உள்ளதால், அவரை புதிய சுகாதாரத் துறை செயலராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் இவரது நிர்வாகத் திறன் பயனளிக்கும் என கூறப்படுகிறது.