சென்னை: பிஇ., பிடெக்., பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் தரவரிசை அடிப்படையில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
பி.இ., பிடெக்., பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
4 சுற்று கலந்தாய்வு
2021-22 ஆண்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான துணைக் கலந்தாய்விற்கு அக்டோபர் 14ஆம் தேதி 19ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரியில் சேர்வதற்கு உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டன.
1,52,000 மாணவர்கள்
440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த இடங்களில் சேர்வதற்கு 95 ஆயிரத்து 336 மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களில் 86 ஆயிரத்து 433 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலைகழகம் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அரசு கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன.
அரசு மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காகவும், சுயநிதி பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு
உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2021- 22 கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும், மாணவர்கள் சேராமல் உள்ள இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அதனடிப்படையில் ஏற்கனவே கலந்தாய்விற்கு பதிவு செய்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தேதி பின்னர் அறிவிக்கப்படும்
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு உரிய வழிமுறைகள் மற்றும் கால அட்டவணை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு பின்னர் அறிவிக்கும்.
இதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொழில்நுட்ப கல்வியியக்கம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பி.இ., பி.டெக் கலந்தாய்வு - கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகளவு தேர்வு செய்த மாணவர்கள்!