தமிழ்நாட்டில் வருகின்ற 27, 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் சுமுகமாக நடத்தவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இருக்கவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தவும், இணையம் மூலம் நேரடியாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் மத்திய அரசுப் பணியில் உள்ளவர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளுக்கு மூன்று பறக்கும் படைகள் அமைத்து மாவட்டங்கள் முழுமையாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பறக்கும் படையில் முதன்மைத் தேர்தல் பொறுப்பு அலுவலர் தலைமையில் காவல் துறையினர் குழுக்களாக தேர்தல் நடக்கவுள்ள 27 மாவட்டங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்வரை பறக்கும்படை குழுக்கள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்க: 27 மாவட்டங்களுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!