சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ‘மை விரல் புரட்சி’ என்னும் தலைப்பில் வாக்காளர்கள் விழிப்புணர்வு பரப்புரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, பல கலாசாரங்களை கொண்ட மக்கள் வசித்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அளவில் நாடு திகழ்கிறது. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டிற்கு தேர்தல் நடத்த மிகப்பெரும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் செய்துவருகிறது.
தேர்தலில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. பணப் பட்டுவாடா குறித்து அரசியல் கட்சிகள் மாறி மாறி புகார் அளிக்கிறார்கள். வாக்களிப்பதற்காக பணம் கொடுப்பதும் குற்றம், அதை வாக்காளர்கள் வாங்குவதும் குற்றம். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பணம் நடமாட்டத்தை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார்.