சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 94ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சிவாஜி கணேசனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, மற்றொரு மகனான ராம் குமார், பேரன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், சிவாஜி ரசிகர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
![சிவாஜி கணேசன் பிறந்த நாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13227678_sivaji-ganesan.jpg)
பின்னர் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, ராம்குமார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் முதலமைச்சரை வரவேற்று பேசினர்.
தமிழ்நாடு அரசுக்கு நன்றி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, "சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடியது அண்ணன் ஸ்டாலின் அவர் மீது வைத்திருந்த அன்பை காட்டுகிறது. ஸ்டாலினின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
அரசு விழாவாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி" என தெரிவித்தார்.
இரு அடையாளம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, "சிவாஜி ஒரு உடம்பில் நூறு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அவர் உச்சரித்த தமிழில் தான் பாமரனும் தமிழை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என கற்றுக் கொண்டான். இரண்டு ஆளுமைகளை மக்கள் மறக்க மாட்டார்கள். தமிழுக்கு இரண்டு அடையாளம். எழுத்தால் கலைஞர் மற்றும் குரலால் சிவாஜி.
இன்னும் 7 ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் நூறாவது பிறந்த நாள் வரவுள்ளது. 100ஆவது ஆண்டை அனைத்து தமிழ்நாட்டு மக்களும் வீட்டு விழாவாக கொண்டாடுவார்கள். அப்பொழுதும் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக தொடருவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தலைவன் வந்தாலே தியேட்டர் தெறிக்கும்