சென்னை: தமிழ்நாடு சிட் ஃபண்ட் நிறுவங்கள் மற்றும் அதோடு இணைந்த நிறுவங்கள் சார்பில் சிட் ஃபண்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கராத்தே ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விக்கிரம ராஜா, ”கரோனா காலத்தில் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பேருதவியாக இருந்தன. அரிசி மீதான வரியை திரும்பபெற வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வலியுறுத்தி வருகிறோம். வணிக குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கோடி பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும். முதலீடு போட முடியாத சிறிய வணிகர்களுக்கு முதலீடு கொடுத்து முன்னேற்றிய பெருமை சிட் ஃபண்ட்ஸ்க்கு உள்ளது” என்றார்.
அதன்பின் பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு, ”சிட் ஃபண்ட் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. சிட் ஃபண்ட்ஸ் கிராம புறங்களில் அதிகளவில் உள்ளன. கேரளாவில் 5,000 சிட் ஃபண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இந்திய அளவில் 2002ஆம் ஆண்டு அதிகப்படியான சிட் ஃபண்ட்ஸ் கிளைகள் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டன. நடுத்தர மக்களுக்கு சிட் ஃபண்ட்ஸ் ஒரு வரபிரசாதம்.
மக்கள் பணத்தை சேமிக்கவும், சேமித்த பணத்தை எளிமையாக எடுக்கவும் சிட் ஃபண்ட்ஸ் உதவியாக உள்ளது. சிட் ஃபண்ட்ஸ்க்கான ஜிஎஸ்டியை 18% உயர்த்தி உள்ளனர். இதனால் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதித்ததும், உலக பணக்காரர் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு அதானியை கொண்டு வந்ததுமே மோடி ஆட்சியின் சாதனை. அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் வரி குறைப்பு செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது... மணிசங்கர் அய்யர்