சென்னை: தேனியைச்சேர்ந்த நான்கு பேருக்கு 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் போதைப்பொருள் பயன்பாடு, சமீப காலங்களாக இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது எனவும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்துக்குச்சென்று விசாரித்தனர். அங்கு தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச்சேர்ந்த பாண்டியன், கதிரேசன், மணிமாறன், தெய்வம் ஆகிய 4 பேர் கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்தனர். அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 56 கிலோ கஞ்சாவைப்பறிமுதல் செய்து, அவர்களுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை இன்று (செப்.21) விசாரித்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் பாண்டியன் உள்பட 4 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி, நால்வருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில், போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சமூக நோய் என்றும் போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீப காலங்களில் இளம் பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளதாகவும், இது ஒட்டுமொத்த சமூகத்திலும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஈரானில் ஹிஜாப் சட்டத்தால் பறிபோன இளம் உயிர் - ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் போராட்டம்