சென்னை: பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் விரும்பாத அவலநிலை நிலவுகிறது. தனியார் பள்ளியில் அளிக்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளம், வேலை பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் பணியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டத சூழ்நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,559 இடங்கள் காலியாக இருந்தும், 152 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 4,910 காலியாக இருந்தும் 2,069 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம் செய்தனர். பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேரும் என 2,221 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7 ஆயிரத்து 500 தொகுப்பூதியத்திலும், 5 ஆயிரத்து 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும், 3 ஆயிரத்து 188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
24 மாவட்டங்களில் காலியாக இருந்த 11 ஆயிரத்து 825 பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர். இவர்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, பணியில் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த உத்தரவில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்த பணி நாடுநர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழுவினர் ஒப்புதல் வழங்கிட வேண்டும். பணிநாடுநர்களை முற்றிலும் தற்காலிகப்பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த பணியிடங்களில் 2,069 பட்டதாரி ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்கள் 152 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆசிரியர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் காரணமாக பணியில் சேர விரும்பவில்லை என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை