சி.ஏ.ஏ,என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் , ”தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டங்களை கைவிட வேண்டும். இல்லையென்றால் டெல்லியில் நடைபெற்ற சம்பவத்தைப் போல் வன்முறை வெடிக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, போராட்டம் நடத்தி வரும் பெண்களை மிரட்டும் வகையில் பேசி வரும் அவரை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், காவல் துறை இயக்குநர் திரிபாதியை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் போராடிவரும் பிரஜாபதி அடிகளாருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யவும் அப்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல் துறை இயக்குநர் உடனான சந்திப்பின்போது, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ரஜினிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்?