திருச்சி சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தில் ‘தென் சீரடி’ என்று அழைக்கப்படும் சாய்பாபா கோயில் கட்டப்பட்டுள்ளது. வேப்ப மரத்தை மையமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரமாண்ட சாய்பாபா கோயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சீரடி சாய்பாபா கோயிலாகும். எனவே, இந்தக் கோயிலை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அக்கரைப்பட்டிக்கு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சுற்றுலா வாரம்தோறும் வியாழக்கிழமை காலை 5 மணி அளவில் புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு அக்கரைப்பட்டிக்கு சென்றடையும். அங்கு கோயிலில் நடைபெறும் ஆரத்தி தரிசனம் முடிந்து, இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை உணவு உளுந்தூர்பேட்டையிலும், மதிய உணவு கோயிலிலும், மாலை சிற்றுண்டியுடன் இந்த ஒரு நாள் சுற்றுலா நிறைவடைகிறது.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து குளிர்சாதன சொகுசு பேருந்து இயக்கப்படும். இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக ஒருவருக்கு 1,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 04425333333/ 25333444/ 25333857/25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www. tamilnadutourism. org ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெரினா கடற்கரை கடைகளின் வாடகை விவரத்தை தெரிவித்த மாநகராட்சி